ஞாயிறு, 24 மே, 2009

ஈழத்து இலக்கிய வரலாறு-5

3. கவிதை

இருபதாம் நூற்றாண்டு இலங்கைத் தமிழ்க்கவிதை என்று பேசும்போது நவீன தமிழ்க் கவிதையையே நாம் பிரதானமாகக் கருதுகின்றோம். 'நவீன தமிழ்க்கவிதைரு அல்லது 'தற்காலத் தமிழ்க்கவிதை' என்ற ஒரு தொடரை இப்போதெல்லாம் நாம் அடிக்கடி பயன்படுத்துகின்றோம். பழைய, பண்டித மரபு வழிப்பட்ட நிலப்பிரபுத்துவ வாழ்க்கை அம்சங்களை உள்ளடக்கமாகக் கொண்ட பிரபந்த இலக்கிய வகைகளிலிருந்து மாறுபட்டு,நிகழ்கால வாழ்க்கை நிலைமைகளையும், அதன் அடிப்பிறந்த வாழ்க்கை நோக்குகளையும் கருத்தோட்டங்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட கவிதைகளையே நவீன கவிதை என்ற தொடர் குறிக்கின்றது. நவீன உள்ளடக்கத்துக்கு ஏற்ப அதன் வடிவ அமைப்பிலும் -சொற்கள், சொற் சேர்க்கைகள், ஓசை ஒழுங்கு, வௌிப்பாட்டு முறை போன்றவற்றிலும் - இக் கவிதை முறை பழைய செய்யுள் இலக்கியங்களிலிருந்து எவ்வளவோ மாறியுள்ளது என்பதையும் நாம் காண்கின்றோம்.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இப்புதிய கவிதை மரபு, சுமார் முக்கால் நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ளது. இப்புதிய கவிதை மரபை அங்கு தோற்றுவித்து வலுப்படுத்தியவன் பாரதியே என்பது இப்போது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்படும் உண்மை.

'தற்காலத் தமிழ்க்கவிதை' என்று இனங் காணப்படுகின்ற இக்கவிதை மரபு தமிழ்நாட்டில் அங்குள்ள நிலைமைக்கு ஏற்ப தோன்றி வளர்ச்சி அடைந்ததைப் போன்றே, ஈழத்திலும் நமது நாட்டுக்கு உரிய சில தனிப் பண்புகளையும், பாதிப்புகளையும் கொண்டதாக வளர்ச்சியடைந்துள்ளதை நாம் இப்போது தௌிவாக இனம் கண்டு கொள்கின்றோம். ஈழத்தைப் பொறுத்தவரை இக்கவிதை மரபு சுமார் நாற்பது ஆண்டு கால வரலாற்றையே கொண்டுள்ளது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் 'மறுமலர்ச்சிக் காலம்' என்று சொல்லப்படுகின்ற 1940 ஆம் ஆண்டுகளிலேயே இங்கு இப்புதிய கவிதை மரபு தோன்றி வளர்ச்சியடையத் தொடங்கியது.

19ஆம் நூற்றாண்டின் மரபு வழிப்புலவர்கள் சிலர் இந்த நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களிலும் வாழ்ந்தனர். சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர், க. மயில்வாகனப் புலவர், ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை, நவநீதகிருஷ்ணபாரதியார், அருள்வாக்கி அப்துல்காதிறுப் புலவர் முதலியோர் இவர்களுள் முக்கியமாகக் குறிப்பிடவேண்டியவர்கள். ஆயினும் இவர்கள் அனைவரையும் சென்ற யுகத்தின் பிரதிநிதிகளாகவே கருதவேண்டும். இந்த நூற்றாண்டின் கவிதை மரபுடன் இவர்களைத் தொடர்புறுத்த முடியாது.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த, பாரதியின் சம காலத்தவரான பாவலர் துரையப்பாபிள்ளை,சோம சுந்தரப்புலவர், விபுலானந்த அடிகள் ஆகியோரும் இந்த நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் அநேக கவிதைகளைப் படைத்துள்ளனர். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலச் சிந்தனைப் போக்குகள் சில இவர்களது கவிதைகளில் காணப்படினும் இன்றைய அர்த்தத்தில் இவர்கள் ஈழத்து நவீன கவிதையின் முன்னோடிகள் என்று கருதப்படுபவர்கள் அல்லர். பழைய மரபுக்கும் புதிய மரபுக்கும் இடைப்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர்.

1940 ஆம் ஆண்டுக்குப்பின் குறிப்பாக 1942ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் சில இலக்கிய ஆர்வம் உடைய இளைஞர்கள் சேர்ந்து 'மறுமலர்ச்சிச் சங்கம்' என்ற ஒரு இலக்கிய ஸ்தாபனத்தை அமைத்ததைத் தொடர்ந்து பாரதிதாஸன், கலைவாணன் போன்ற அக்காலத்து தமிழ் நாட்டு முன்னணிக் கவிஞர்களின் செல்வாக்கினால் தூண்டப்பட்ட சில இளம் கவிஞர்களின் முயற்சியினாலேயே இங்கு நவீன கவிதைப் பாணி உருவாகி வளர்ச்சி அடையத் தொடங்கியது. நாவற் குழியூர் நடராசன், சோ. நடராசன், அ.ந. கந்தசாமி, மஹாகவி, சாரதா, செ. கதிரேசபிள்ளை, யாழ்ப்பாணன் முதலியோர், இக்காலப் பகுதியில் கவிதை எழுதத் தொடங்கினர். இவர்களுள் நாவற்குழியூர் நடராசன், அ.ந. கந்தசாமி, மஹாகவி ஆகிய மூவரும் இக்காலப்பிரிவில் தோன்றிய முக்கியமான கவிஞர்களாவர்.

நாவற்குழியூர் நடராசன் மனோரதியப் பாங்கான கவிதைகளையே அதிகம் எழுதினார். பொருளைவிட ஒசைநயத்துக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தார். அவரது கவிதைகள் சில 'சிலம்பொலி' என்ற பெயரில் நூல்வடிவம் பெற்றுள்ளது.

இலங்கைத் தமிழ் கவிதையில் இடதுசாரிச் சிந்தனை போக்கை முதலில் பிரதிபலித்தவர் அ.ந. கந்தசாமியே ஆவர். 'கவீந்திரன்' என்ற புனைபெயரிலும் இவர் கவிதைகள் எழுதிவந்தார். ஏராளமாக எழுதாவிட்டாலும் வில்லூன்றி மயானம், துறவியும் குஸ்டரோகியும் போன்ற இவரது சில கவிதைகள் குறிப்பிடத்தக்கன.

இம்மூவருள்ளும் இலங்கைத் தமிழ்க் கவிதையில் அதிக பாதிப்பையும் பங்களிப்பையும் செய்தவர் மஹாகவியே ஆவர். 1971 ஆம் ஆண்டு அவர் மரணிக்கும்வரை சுமார் முப்பது ஆண்டு காலம் கவிதை எழுதி வந்தார். பல நூற்றுக் கணக்கான கவிதைகளும் சேனாபதி, பொய்மை, சிற்பி ஈன்ற முத்து, கோலம், திருவிழா, அடிக்கரும்பு முதலிய வானொலிப் பா நாடகங்களும், கோடை, புதியதொரு வீடு, முற்றிற்று முதலிய மேடைப் பா நாடகங்களும், கல்லழகி, சடங்கு, கந்தப்பசபதம், கண்மணியாள் காதை, ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் முதலிய காவியங்களும் மானிலத்துப் பெரு வாழ்வு எனும் தலைப்பில் அமைந்த இசைப்பாடல்களும் பொருள்நூறு என்னும் சிறு கவிதைகளும் பிஞ்சுப் பாடல்கள் என்னும் சிறுவர் கவிதைகளும் அவரது படைப்புக்களாக உள்ளன. வள்ளி, குறும்பா, கோடை, கண்மணியாள்காதை, ஒரு சாதாரண மனிதனது சரித்திரம், வீடும் வௌியும், இருகாவியங்கள் ஆகிய அவரது ஏழு நூல்கள் இதுவரை வௌிவந்துள்ளன. நூல்வடிவம் பெறாதவை பல.

மஹாகவி, யாழ்ப்பாணத்துக் கிராம மக்களின் வாழ்வையே தனது கவிதைப் பொருளாகக் கொண்டார். யதார்த்த நெறியைக் கவிதையில் கையாண்டார். பழைய யாப்பு வடிவங்களைப் பேச்சோசைப் பாங்கில் எளிமைப்படுத்தினார். கிராமிய வழக்குச் சொற்களைக் கவிதையில் தாராளமாகப் பயன்படுத்தினார். மனித வாழ்க்கையில் ஒரு ஆழமான நம்பிக்கையையும் மனிதாபிமானத்தையும் அவர்தன் கவிதைகளில் பிரதிபலித்தார். தனக்குப்பின் வந்த பல கவிஞர்களில் அவர் கணிசமான பாதிப்பைச் செலுத்தினார். இக்காரணங்களால் ஈழத்து நவீன கவிதையில் ஒரு பெரிய ஆழுமையாக பல விமர்சகர்களால் மஹாகவி கருதப்படுகின்றார்.

1950 ஆம் ஆண்டுகள் இலங்கை வரலாற்றில் முக்கியமான காலப் பிரிவாகும். கிடைத்த சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக்குவதற்கான முயற்சிகளும் போராட்டங்களும் இக்காலப் பிரிவிலேயே தொடங்கின. தேசியம் பற்றிய பிரக்ஞை பொதுமக்கள் மயமாகத் தொடங்கிய காலப்பிரிவும் இதுவே. தேசிய இனப் பிரச்சினை பெரிய அரசியல் பிரச்சினையாக மாறிய காலமும் இதுவே.

இக்காலப் பகுதியில் இலங்கைத் தமிழ்க் கவிதையில் பல புதியவர்களையும் சில புதிய போக்குகளையும் நாம் காண்கின்றோம். உண்மையில் இக்காலப் பகுதியிலேயே இலங்கையின் நவீன தமிழ்க் கவிதை வீறுடன் எழுச்சி பெற்றது எனலாம். நாம் முன்னர் குறிப்பிட்ட கவிஞர்களும் இக்காலப் பகுதியிலேயே முதிர்ச்சி பெற்றனர். முருகையன், நீலாவணன், சில்லையூர் செல்வராசன், ராஜபராதி, புரட்சிக்கமால், அண்ணல் முதலியோர் இக்காலப் பகுதியில் அதிகம் எழுதிப் பிரபலம் பெற்றவர்கள். ஆயினும் தங்கள் நோக்கிலும் போக்கிலும் இவர்கள் தனித்தன்மைகளைக் கொண்டிருந்தனர்.

விஞ்ஞானப் பட்டதாரியான முருகையனின் கவிதைகளில் சிந்தனைக் கனதியே பிரதான அம்சமாகும். விஞ்ஞான அறிவின் செல்வாக்கை இவரது பல கவிதைகளில் காணலாம். கவிதைகளாகவும் பா நாடகங்களாகவும் காவியங்களாகவும் இவரது படைப்புக்கள் அதிகம் உள்ளன. நெடும்பகல் இவரது காவியமும் கவிதைகளும் அடங்கிய தொகுப்பு நூலாகும். வந்து சேர்ந்தன-தரிசனம், கோபுரவாசல் ஆகியன பாநாடக நூல்களாகும். ஆதிபகவன் என்ற காவிய நூல் அண்மையில் வௌிவந்துள்ளது. கடூழியம் என்னும் குறியீட்டுப் பாங்கான இவரது பாநாடகம் சமீபகாலத்தில் இலங்கையில் மேடையேற்றப்பட்ட முக்கியமான நாடகங்களுள் ஒன்றாகும். மஹாகவியுடன் இவர் சேர்ந்து எழுதிய 'தகனம்' குறிப்பிடத்தக்க ஒரு பரிசோதனைக் காவியமாகும். ஒருவரம் இவர் மொழி பெயர்த்து வௌியிட்ட ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பு.

50 களில் எழுதத் தொடங்கிய நீலாவணன் 1975 ஜனவரியில் மரணித்தார். அதுவரை அவர் ஏராளமான கவிதைகளையும் சில பா நாடகங்களையும் வேளாண்மை என்ற முடிவுறாத ஒரு காவியத்தையும் படைத்துள்ளார். ஆரம்பத்தில் அழகிய காதல் கவிதைகள் பலவற்றை எழுதிய நீலாவணன் 1960 களில் கிழக்கிலங்கைக் கிராமங்களின் வாழ்க்கை முரண்பாடுகளைத் தனது கவிதைகள் பலவற்றில் சித்திரமாக்கினார். ஆயினும் இவரது பிற்காலக் கவிதைகள் பலவற்றில் ஆன்மீக உணர்வே வௌிப்பாடு பெற்றுள்ளது. 'வழி' இவரது முக்கியமான கவிதைகள் சிலவற்றை உள்ளடக்கிய கவிதைத் தொகுப்பாகும்.

சில்லையூர் செல்வராசன் (தான்தோன்றிக் கவிராயர்) அங்கதப் பாணியிலான கவிதைகள் எழுதுவதில் வல்லவராக விளங்கினார். பிரதானமாக இவர் ஒரு மேடைக்கவிஞரே எனலாம். கவியரங்குகளில் இவரது கவிதைகள் அதிகம் வரவேற்பைப் பெற்றன. பிற்காலத்திலே இவர் சிலேடை போன்ற மொழி வித்தைகளிலும் அக்கறை காட்டியுள்ளார். இவரது கவிதை நூல்கள் எதுவும் வௌிவரவில்லை.

இராஜ பாரதி, அண்ணல் ஆகியோர் பிரதானமாகக் காதல் கவிஞர்களே. ஓசைநயமும் உவமைச் சிறப்புமிக்க பல காதல் கவிதைகளை இவர்கள் எழுதியுள்ளனர். தீயுண்ட வீரமுனை என்ற இராஜ பாரதியின் சிறு கவிதை நூல் இனக்கலவரம் ஒன்றில் பாதிக்கப்பட்ட வீரமுனை என்ற கிராமத்தைப் பற்றியது. அண்ணலின் 'அண்ணல்' கவிதைகள் என்ற தொகுப்பும் வௌிவந்துள்ளது. ஐம்பதுகளில் வளர்ச்சியடைந்த முக்கியமான கவிஞர்களில் ஒருவரான புரட்சிக்கமால் பிற்காலத்தில் முற்றிலும் இஸ்லாமிய மரபுணர்ச்சிக் கவிஞராக மாறினார். 'புரட்சிக்கமால் கவிதைகள்' தொகுப்பாக வந்துள்ளது.

1950 களில், பரமஹம்சதாசன், பார்வதிநாதசிவம், திமிலைத்துமிலன், அம்பி, சக்தி அ.பாலையா, எம்.சி.எம். சுபைர், யுவன், போன்ற இன்னும்பல குறிப்பிடத்தகுந்த கவிஞர்களும் வளர்ச்சி அடைந்துள்ளனர். ஆயினும் மஹாகவி, முருகையன், நீலாவணன் ஆகிய மூவருமே 50 களிலும் 60 களிலும் கூட ஈழத்தின் பிரதான மூத்த கவிஞர்களாக விளங்கினர்.

1950 ஆம் ஆண்டுகளின் 'பின்பகுதி' அரசியல் ரீதியாக இலங்கைத் தமிழ்க்கவிதையில் பெரிதும் செல்வாக்குச் செலுத்திய காலப்பிரிவாகும். இக்காலப் பகுதியே அரசியல் கவிதையின் தொடக்க காலமும் ஆகும். தென் இலங்கையில் சிங்களம் மட்டும் என்ற அரசியல் கோசத்தின் எதிரொலியாக தமிழ் மக்கள் மத்தியில் மொழி உணர்வும் இனரீதியான அரசியல் எழுச்சியும் தீவிரம் அடைந்தன. இயல்பாகவே மொழி உணர்வுடைய, ஆனால் அரசியல் ரீதியாக வெறுமையாக இருந்த பெரும்பாலான தமிழ்க் கவிஞர்கள் 'தமிழ் அரசு' இயக்கத்தால் எளிதில் ஈர்க்கப்பட்டார்கள். இன, மொழி உணர்வை உள்ளடக்கமாகக் கொண்டு நூற்றுக்கணக்கான கவிதைகள் இக்காலப் பகுதியில் எழுந்தன. தமிழரசுக்கட்சி சார்பான சுதந்திரன் பத்திரிகை இத்தகைய கவிதைகளின் பிரதான வௌியீட்டுக் களமாக அமைந்தது. செந்தமிழ்ச் செல்வம், உயிர்தமிழுக்கு, தமிழ் எங்கள் ஆயுதம் முதலிய தொகுப்பு நூல்களாகவும் தமிழ் இயக்கக் கவிதைகள் வௌிவந்தன. இந்த அரசியல் அலையில் இருந்து ஒதுங்கி நின்ற கவிஞர்கள் மிகச்சிலரே.

எனினும் 1958 ஆம் ஆண்டின் இனக்கலவரம் இக்கவிதைப் போக்கை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது. இனரீதியான அரசியல் எழுச்சியின் விளைவுகளை மனிதாபிமானமிக்க இக்கவிஞர்கள் நேரடியாகக் கண்டனர். பலர் அதில் இருந்து விடுபட்டனர். சிலர் புதியதொரு அரசியல் போக்குக்கான தேடலில் ஈடுபட்டனர். எனினும் தீர்த்து வைக்கப்படாத தேசிய இனப் பிரச்சினை, பெரும்பான்மை இன ஆளும் வர்க்கத்தின் மேலாதிக்க வேட்கை ஆகியவற்றின் விளைவாக இன்றுவரை இக்கவிதைப் போக்கு சிறுபான்மையாக நீடித்து நிலவக் காணலாம். கவிஞர் காசி ஆனந்தன் இப்போக்கின் சிறந்த பிரதிநிதியாக இருந்து வருகின்றார். அவரது உயிர் தமிழுக்கு, தமிழன் கனவு, தெருப்புலவர் சுவர்க்கவிகள் முதலியன இப்போக்கில் அமைந்த கவிதை நூல்களாகும்.

1960 ஆம் ஆண்டுகள் இலங்கைத் தமிழ்க் கவிதையைப் பொறுத்தவரை பிறிதொரு வகையில் முக்கியமான காலப் பிரிவாகும், சமூகப் பிரக்ஞையும் முற்போக்குச் சிந்தனையும் தமிழ்க்கவிதையின் பிரதான போக்காக மாறிய காலப்பிரிவும் இதுவே. 50 ஆம் ஆண்டுகளில் குறிப்பாக 1956 ஆம் ஆண்டின் அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து நாவல், சிறுகதை, விமர்சனத்துறைகளில் முற்போக்குச் சிந்தனை பிரதான இடம் பெறத் தொடங்கியது. ஆனால் கவிதையைப் பொறுத்தவரை 60 ஆம் ஆண்டுகள், அதிலும் குறிப்பாக 1965 ஆம் ஆண்டுக்குப் பின்னரே முற்போக்குச் சிந்தனை முதன்மைபெறத் தொடங்கியது. எல்லோரும் இல்லை எனினும் ஒரு கணிசமான தொகைக் கவிஞர்கள் முற்போக்குச் சிந்தனையால் பாதிக்கப்பட்டனர். இவர்களுள் பலர் அரசியல் இயக்கங்களிலும் நேரடியாக ஈடுபட்டனர்.

பசுபதி, சுபத்திரன், புதுவை இரத்தினதுரை போன்றோர் நேரடியான பிரச்சாரப் பாங்கான அரசியல் கவிதைகள் எழுதினர். எம்.ஏ.நுஃமான், சண்முகம் சிவலிங்கம் ஆகியோர் அன்றாட வாழ்க்கை நிலைமைகளைச் சித்திரிப்பதன் ஊடாக கலாபூர்வமாக அரசியல் உணர்வை வௌிப்படுத்த முனைந்தனர். மௌனகுரு, ஈழவாணன், இ. சிவானந்தன், மருதூர்க்கனி, பண்ணாமத்துக்கவிராயர், கலைவாதி கலீல் போன்றோரும் தம் கவிதைகளில் முற்போக்குச் சிந்தனைகளைப் பிரதிபலித்தனர். மேற்காட்டியவர்கள் எல்லாரும் ஏதோ ஒருவகையில் முற்போக்கு அரசியல் சித்தாந்தங்களுடன் உறவு உடையவர்களாவர்.

இக்காலப் பிரிவில் முற்போக்குச் சித்தாந்தங்களுடன் தம்மை இனம் காட்டிக்கொள்ளாத சீர்திருத்தவாதப் போக்குடைய அல்லது ஆன்மீக நோக்குடைய பல கவிஞர்களும் உள்ளனர். 60ஆம் ஆண்டுகளின் கவிதை முயற்சியில் இவர்களின் பங்களிப்பும் கணிசமானதாகும். ஜீவா.ஜீவரத்தினம், வி.கந்தவனம், காரை சுந்தரம்பிள்ளை, பாண்டியூரன், மு.சடாட்சரன், பஸீல் காரியப்பர், ஏ.இக்பால், அன்பு முகையதீன், சா.வெ. பஞ்சாட்சரம், பா. சத்தியசீலன், மு.பொன்னம்பலம், குமாரசாமி போன்றோர் இப்போக்குகளின் குறிப்பிடத் தகுந்த பிரதிநிதிகளாவர். இவர்களுள் சிலரின் பிற்காலக்கவிதைகளிலே முற்போக்குச் சிந்தனையின் தாக்கத்தையும் காணலாம். இவர்களுள் சிலர் 60க்கு முன்னரே கவிதை உலகில் பிரவேசித்தவர்கள் எனினும் 60 ஆம் ஆண்டின் பின்னரே முதிர்ச்சியும் பிரபலமும் பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்காலப் பகுதியில் எழுதத் தொடங்கிய கவிஞர்கள் சிலரின் கவிதை நூல்கள் சில வௌிவந்துள்ளன.பசுபதியின் 'பசுபதி கவிதைகள்', சுபத்திரனின் 'இரத்தக்கடன்', இரத்தினதுரையின் 'காலம் சிவக்கிறது', 'ஒரு தோழனின் காதல் கடிதம்', எம்.ஏ. நுஃமானின் 'தாத்தாமாரும் பேரர்களும்', ஈழவாணனின் 'அக்கினிப்பூக்கள்', இ. சிவானந்தனின் 'கண்டறியாதது', ஜீவா ஜீவரத்தினத்தின் 'வாழும் கவிதை', வி. கந்தவனத்தின் 'ஏனிந்தப் பெருமூச்சு', 'இலக்கிய உலகம்', 'கவியரங்கில் கந்தவனம்', காரை சுந்தரம்பிள்ளையின் 'தேனாறு', 'சங்கிலியம்', சா.வே. பஞ்சாட்சரத்தின் 'எழிலி, பா.சத்தியசீலனின் 'பா', மு.பொன்னம்பலத்தின் யுஅது'. அன்புமுகையதீனின் 'நபிகள் வாழ்வில் நடந்த கதை' ஆகியன 60, 70 களில் வௌிவந்தன.

1960 ஆம் ஆண்டுகளில் ஈழத்துக் கவிதைகளின் உருவ அமைப்பில் ஏற்பட்ட ஒரு முக்கியமான மாற்றம் பற்றியும் இங்கு குறிப்பிடவேண்டும்.

60 ஆம் ஆண்டுகள் வரை யாப்போசையும், சந்தலயமும் கவிதையின் பிரதான அம்சங்களாகக் கருதப்பட்டு வந்தன. 'யாப்புக்குள் இருந்து யாழ்மீட்டுபவள்' என மஹாகவி ஒரு கவிதை எழுதினார். ஓசைநயம் மிக்க பல்வேறு வகையான யாப்பு வடிவங்களிலும், சந்த விகற்பங்களிலும், ஈழத்துக் கவிஞர்கள் அக்கறை காட்டினார். ஆனால் 60 ஆம் ஆண்டுகளில் இறுக்கமான யாப்போசை விருப்பு தளர்ச்சியடைந்தது. பேச்சோசைப் பாங்கான கவிதைகள் பெரிதும் எழுதப்பட்டன. அதற்கேற்ப செய்யுளின் அமைப்பு முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அன்றாட வழக்குச் சொற்கள் இயல்பான சொற் சேர்க்கை, சிறு வாக்கிய அமைப்பு என்பன கையாளப்பட்டன. செய்யுளின் அடி அமைப்புக்கு ஏற்ப அன்றி, பொருள் அமைப்புக்கு ஏற்ப சீர்பிரித்து வரிகள் அமைக்கப்பட்டன. ஓசை நிறுத்தத்துக்காக நிறுத்தக் குறிகளும் இடைவௌி (Space) களும் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு செய்யுளின் யாப்போசை குறைக்கப்பட்டு பொருள் புலப்பாட்டுக்கு ஏற்ப பேச்சோசை நிலை நிறுத்தப்பட்டது. ஒரு செய்யுளுக்குரிய எதுகைமோனை, சீர்தளைக் கட்டுப்பாடுகளை இழக்காமலேயே பேச்சோசையின் சகல பண்புகளையும் ஈழத்துக்கவிதை பெற்றது.

மரபு ரீதியான எல்லாச் செய்யுள் உருவங்களிலும் குறிப்பாக வெண்பா, கட்டளைக்கலிப்பா, கட்டளைக் கலித்துறை போன்ற வரையறுப்புக்கள் மிகுந்த வடிவங்களிலும் கூட ஈழத்து நவீன கவிஞர்கள் பேச்சு ஓசைப் பண்பைச் செயற்படுத்தி இருக்கின்றார்கள். மஹாகவி, முருகையன், நீலாவணன், எம்.ஏ.நுஃமான், சண்முகம் சிவலிங்கம் ஆகியோரே இதில் முக்கிய பங்களிப்புக்களைச் செய்துள்ளனர் எனலாம். முருகையனின் 'பேச்சோசையும் பாட்டோசையும்' என்ற கட்டுரையும் எம்.ஏ.நுஃமானின் 'பேச்சுமொழியும் கவிதையும்' 'மஹாகவியும் வழக்குத் தமிழும்' என்ற கட்டுரைகளும் ஈழத்து நவீன கவிதையின் இப்பண்பை எடுத்துக் காட்டுவனவாய் அமைந்தன. புதிய உள்ளடக்கத்தைக் கொண்ட புதிய கவிதைத் தேவைகளுக்கு ஏற்ப மரபுவழிச் செய்யுள் நவீனமயமாக்கப் பட்டதன் விளைவே இப்பேச்சோசைப்பண்பு எனலாம். இது தமிழகத்துக் கவிதையில் காணப்படாத ஓர் அம்சம் ஆகும்.

1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கைத் தமிழ்க் கவிதையில் ஒரு புதிய அலை தோன்றியது. இக்காலப் பகுதியில் ஏற்பட்ட அரசியல் இலக்கிய விழிப்புணர்வும், தென் இந்தியப் புதுக்கவிதைகளின் செல்வாக்கும் நூற்றுக்கணக்கான இளைஞர்களை கவிதை உலகுள் இழுத்துவிட்டன. புதிய சமுதாய மாற்றத்துக்காகக் குரல் கொடுக்கும் புரட்சிகரச் சிந்தனை உடையோரே இவர்களுள் அதிகமாகக் காணப்பட்டனர். இவர்கள் யாவரும் தங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் வௌியிடுவதற்குப் புதுக்கவிதை ஒரு இலகுவான சாதனம் எனக் கண்டனர். 1970க்கு முன்பும் ஈழத்துக் கவிதை உலகில் புதுக்கவிதை அல்லது வசன கவிதைப் போக்கு இருந்தது. இன்று தென்னிந்திய இலக்கியத்துடன் தன்னை முற்றிலும் இணைத்துக்கொண்ட புதுக்கவிதையாளர் தருமு சிவராமு ஈழத்தவரே. 60 க்களில் மு. பொன்னம்பலம், கே.எஸ். சிவகுமாரன், தா. ராமலிங்கம் முதலியோரும் புதுக்கவிதைகள் எழுதினர். தா. ராமலிங்கம் முக்கிய கவனத்துக்குரிய தனித்துவமான புதுக்கவிதைக்காரராவர். இவரது புதுமெய்க்கவிதைகள், காணிக்கை ஆகிய இரு நல்ல புதுக்கவிதைத் தொகுதிகள் வௌிவந்தன. எனினும் 70க்கு முன்னர் இலங்கையில் புதுக்கவிதை சிறுபான்மையினருக்கு உரியதாகவும் இலக்கிய அங்கீகாரம் பெறாததாகவுமே இருந்தது. ஆனல் 70க்குப் பின்னர் ஈழத்துக்கவிதை பெரும்பாலும் புதுக்கவிதையாகவே மாறிவிட்டது. எல்லா சஞ்சிகைகளும், பத்திரிகைகளும் புதுக்கவிதைக்கு இடம் கொடுக்கின்றன. ஏராளமான புதுக்கவிதைப் பிரசுரங்களும் வௌிவந்துள்ளன. முற்போக்கான கருத்துக்களே இன்றைய புதுக் கவிதையின் பலம் என்று சொல்ல வேண்டும். கவித்துவமும் கலைப்பெறுமானமும் உடைய படைப்புக்கள் இவற்றுள்மிகக் சொற்பமாகவே காணப்படுகின்றன. பெரும்பாலான கவிதைகள் துணுக்குகளாகவும், சிறு சிறு கூற்றுக்களாகவுமே உள்ளன. சுருக்கமாகச் சொல்வதானால் பெரும்பாலான தமிழ்நாட்டுப் புதுக்கவிதைகளில் காணப்படுவது போன்ற ஓர் இலக்கிய முதிர்ச்சியின்மை பெரும்பாலான ஈழத்துப் புதுக்கவிதைகளின் பொதுப் பண்பாகவும் உள்ளது எனலாம். புதுக்கவிதை உலகில் சில தனி ஆளுமைகள் வளர்ச்சியடையும் வரை நிலைமை இவ்வாறே இருக்கக்கூடும். இத்தகைய தனி ஆளுமையின் வளர்ச்சிக்கான அறிகுறிகளும் சமீபகாலத்தில் தென்படத் தொடங்கியுள்ளன. இவ்வகையில் சொந்த அனுபவ வௌிப்பாட்டுக்கு முதன்மை கொடுக்கும் அ. யேசுராசா, சமூக அரசியல் உணர்வுகளுக்கு முதன்மை கொடுக்கும் வ.ஐ.ச. ஜெயபாலன், சிவசேகரம் ஆகியோர் கலை உணர்வுடன் எழுதும் குறிப்பிடத் தகுந்த புதுக்கவிதையாளர்கள் ஆவர்.

மு. கனகராசனின் 'முட்கள்', அன்பு ஜவகர்ஷாவின் 'காவிகளும் ஓட்டுண்ணிகளும்', திக்வல்லைக்காமலின் 'எலிக்கூடு', மேமன் கவியின் 'யுகராகங்கள்', சௌமினி சிவம் ஆகியோரின் 'கனவுப்பூக்கள்', பேனா மனோகரனின் 'சுமைகள்', மூதூர் முகையதீனின் 'முத்து', லோகேந்திரலிங்கத்தின் 'போலிகள்', செந்தீரனின் 'விடிவு',பூநகர் மரியதாஸின் 'அறுவடை' முதலிய புதுக்கவிதைத் தொகுப்புக்கள் 1970க்குப் பின்னர் வௌிவந்துள்ளன.தொகுப்புகள் எதுவும் வௌியிடாதபோதிலும் சபா-ஜெயராசா, சாருமதி, ஜவாத் மரைக்கார் முதலிய அனேகர் இங்கு புதுக்கவிதை எழுதிவருகின்றனர். அன்பு ஜாவகர்ஷா தொகுத்த பொறிகள், சரவணையூர் சுகந்தன் தொகுத்த 'சுவடுகள்' ஆகிய புதுக்கவிதைத் தொகுப்புக்களில் ஐம்பதுக்கும் அதிகமான கவிஞர்களின் படைப்புக்கள் இடம்பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக, உயர் இலக்கியமட்டத்தில் புதுக்கவிதை, மரபுக்கவிதை பற்றிய முரண்பாடு அருகி வருவதை அவதானிக்க முடிகின்றது. இவ்விருநிலை முரண்பாட்டின் சமூக வரலாற்றுப் பின்னணி எவ்வாறு இருப்பினும், நடைமுறையில் செய்யுள் அமைப்பில் எழுவது மரபுக்கவிதை, செய்யுள் அமைப்பை ராகரிப்பது புதுக்கவிதை என்ற கருத்தே நிலவிவருகின்றது. புதுக்கவிதை என்பதற்கு நவீன கவிதை (Modern Poetry) என்ற அர்த்தம் கொடுக்கப்பட்டால் (அதுவே சரியானதும் ஆகும்) பாரதியே தமிழின் முதலாவது புதுக் கவிஞனாவான். ஆனால் பாரதிக்குப் பின்னர் தமிழகத்தில் நவீன வாழ்க்கை உள்ளடக்கத்தை, நவீன கண்ணோட்டத்தில் பிரதிபலிப்பதற்கு செய்யுள் நடையைக் கையாளும் ஆற்றல் உள்ள கவிஞர்கள் தோன்றாததால், செய்யுளை நிராகரித்து பிச்சமூர்த்தி வழியில் புதுக்கவிதை மரபு உருவாகிற்று. நவீன சிந்தனை செய்யுள் நடையில் வௌிப்பாடு பெற முடியாது என்றும் கூறப்பட்டது. ஆனால், ஈழத்திலே நிலைமை வேறு வகையாக இருந்தது. நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று நவீன சிந்தனையுடன் இயைபுறும் வண்ணம் செய்யுள் நடையும் அதன் அச்சமைப்பும் இங்கு மாற்றியமைக்கப்பட்டது. எம்.ஏ.நுஃமான், சண்முகம் சிவலிங்கம் ஆகியோர் செய்யுளையே கவிதைக்குப் பயன்படுத்தியபோதிலும் அவர்களது படைப்புக்களை மரபுக் கவிதைக்குப் புறம்பான புதுக்கவிதை என்றே ஈழத்தின் பல புதுக்கவிஞர்களும் சில விமர்சகர்களும் கருதி வந்துள்ளனர் என்பது இதை நன்கு விளக்கும். தமிழகத்திலே பாரதிக்குப் பின்னர் இலக்கிய முதிர்ச்சியுள்ள கவிதைகள் எழுதியோர் செய்யுளை நிராகரிக்கும் பிச்சமூர்த்தி வழிவந்த புதுக்கவிஞர்களாகவே இருப்பதுபோல் ஈழத்தில் இலக்கிய முதிர்ச்சியுள்ள கவிதைகள் எழுதியோர் செய்யுளைப் பயன்படுத்திய, மஹாகவி, வழிவந்த நவீன கவிஞர்களேயாவர் என்பது முக்கிய கவனத்திற்கு உரியது. இலக்கிய முதிர்ச்சியுள்ள சிறந்த கவிதைகள் படைப்பதற்குச் செய்யுளைப் பயன்படுத்துவதோ அல்லது செய்யுளை நிராகரிப்பதோ அடிப்படைக் காரணியல்ல என்பதையே இது காட்டுகின்றது. நவீனத்துவம் பற்றிய பிரக்ஞையே அதன் அடிப்படையாகும். சமீப காலமாக கவிஞர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் இந்தத் தௌிவு ஏற்பட்டு வருவதனாலேயே புதுக்கவிதை மரபுக் கவிதை பற்றிய இருநிலை முரண்பாட்டு மோதல் தளர்ச்சியடைந்து வருகின்றது எனலாம்.

இதுவரை இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து நவீன கவிதையின் வளர்ச்சிப் போக்குகள் பற்றிக் கவனித்தோம். இதே காலப் பகுதிகளில் பழைய தலைமுறையைச் சேர்ந்த சிலரும் தொடர்ந்து எழுதி வந்துள்ளனர். இவர்கள் சமய மரபை இறுக்கமாகப் பேணுபவர்கள்; கவிதையைச் சமயச்சார்பான சிந்தனைகளுடன் இணைப்பவர்கள். செந்நெறிப்பாங்கான செய்யுள் நடையை இவர்கள் கையாண்டனர். புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் 'பகவத்கீதை வெண்பாரு இவ்வகையில் விதந்து குறிப்பிடத்தக்கது, புலவர் ஆ. மு. ஷரிபுத்தீன் எழுதிய 'நபிமொழி நாற்பது', இ. இரத்தினத்தின் 'முருகு', சிவன் கருணாலய பாண்டியனாரின் 'அழகியது' ஆகிய நூல்களும் குறிப்பிடத்தக்கன.

கவிஞர் அப்துல்காதர் லெவ்வை, பேராசிரியர் கணபதிப்பிள்ளை ஆகியோர் முற்றிலும் இவர்கள் வரிசையைச் சேர்ந்தவர்கள் அல்லர் எனினும் நவீன கவிஞர்களாகக் கருதப்படுபவர்களும் அல்லர். மொழிபெயர்ப்பாகவும் சொந்த ஆக்கமாகவும் அப்துல்காதர் லெவ்வையின் பல நூல்கள் வௌிவந்துள்ளன. அவரது 'செயினம்பு நாச்சியார் சதகம்' ஒரு வகையில் தேசிகவிநாயகம்பிள்ளையின் மருமக்கள்வழி மான்மியத்துருடன் ஒப்புநோக்கத்தக்கது. பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் 'தூவுதூஉம் மலரே', 'காதலி ஆற்றுப்படை' ஆகிய நூல்களும் இவ்வகையில் குறிப்பிடத் தக்கன. இவ்வகையில் வித்துவான் வேந்தனாரின் 'கவிதைப் பூம்பொழில்' பண்டிதர் வீரகத்தியின் 'செழுங்கமலச் சிலம்பொலி' ஆகியனவும் குறிப்பிடத்தக்கன.
2


இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை பற்றிப் பேசுகையில் மொழிபெயர்ப்பு முயற்சிகளைத் தனியாகக் குறிப்பிடுவது பொருத்தமாகும். பல்வேறு மொழிகளில் இருந்து ஏராளமான கவிதைகள் இக்காலப் பகுதியில் இலங்கைக் கவிஞர்களால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. கலைநோக்கில் இருந்து சமூகநோக்குவரை ஈழத்துத் தமிழ்க்கவிதை பரிணமித்ததை மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் நாம் காணலாம்.

1940 ஆம் 50 ஆம் ஆண்டுகளில் குறிப்பிட்ட சமூக நோக்குபற்றிய பிரக்ஞையின்றி இலக்கியச் சுவையின் அடிப்படையில் பிறமொழிக் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டன. 1960 ஆம் ஆண்டுகளிலும் ஓரளவு இப்போக்கு நீடித்தது எனலாம். இத்தகைய முயற்சிகளில் சுவாமி விபுலானந்தர் ஒரு முன்னோடியாக அமைகின்றார். சேக்ஸ்பியரின் நாடகப் பகுதிகள் பலவற்றை கம்பீரமான, செந்நெறிப் பாங்கான மொழிநடையில் (Classical Style) அவர் பெயர்த்துள்ளார். காளிதாசனின் 'மேகதூதம்' என்ற நூலும், சிங்களப்பிரபந்தமான 'செலஹினி சந்தேசய' என்பது 'பூவைவிடுதூது' என்ற பெயரிலும் திரு.சோ. நடராசாவினால் மொழி பெயர்க்கப்பட்டு நூல் உருப்பெற்றுள்ளன. கவிஞர் அப்துல்காதர் லெவ்வை 'இக்பாலின் கவிதைகள்' சிலவற்றை மொழிபெயர்த்து 'இக்பால் இதயம்' என்ற பெயரில் தொகுப்பாக வௌியிட்டார். அவரே பின்னர் உமர்கையாமின் 'ருபாய்யாத்' தையும் மொழி பெயர்த்தார். இதே நூல் சி. கதிரவேலுப்பிள்ளையாலும் இலங்கையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பாரசீகக் கவிஞரான மௌலானா றூமியின் சில கவிதைப் பகுதிகளை 'மஸ்னவி மலர்கள்' என்ற தலைப்பில் எம்.ஏ. நுஃமான் தமிழ்ப்படுத்தினார். 'மௌலானா றூமியின் சிந்தனைகள்' என்ற பெயரில் ஏ.இக்பால் ஒரு கவிதை நூலை வௌியிட்டார். 'வேட்ஸ்வேர்த், ஜோன்டன், கீற்ஸ் போன்ற ஆங்கில மனோரதியக் கவிஞர்களின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் அடங்கிய நூல் ஒன்றை 'ஒருவரம்' என்ற பெயரில் முருகையன் வௌியிட்டார். 'தேன்மொழி' 'நோக்கு' ஆகிய கவிதைப் பத்திரிகைகளிலும் இலக்கியச்சுவையின் அடிப்படையில் பல பிறமொழிக்கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டன. நோக்கின் ஓர் இதழ் முழுவதும் சேக்ஸ்பியரின் மொழிபெயர்ப்புகளக்காக ஒதுக்கப்பட்டது. ஆன்மீக நோக்கின் அடிப்படையில் பரமஹம்சதாசன், கவி தாகூரின் 'கனிகொய்தல்' என்ற நூலை 'தீங்கனிச்சோலை' என்ற பெயரில் மொழிபெயர்த்து வௌியிட்டார்.

1965 ஆம் ஆண்டின் பின்னர் மொழிபெயர்ப்புக் கவிதைகளிலும் இலக்கியச் சுவைக்குப் பதிலாக அரசியல் நோக்கு முதன்மை பெறத் தொடங்கியதைக் காணலாம். ஏகாதிபத்தியத்துக்கு எதிரான, சமூக, தேசிய விடுதலைப் போராட்டக் கவிதைகள் பல இக் காலப்பகுதியில் மொழி பெயர்க்கப்பட்டன. நமது தேசிய அபிலாஷைகளுடன் அவை ஒத்தியங்குவதே இதற்குக் காரணம் எனலாம். இவ்வகையில், வியட்நாமிய, சீன, ரஷ்ஷிய, இந்திய, பாலஸ்தீன, ஆபீரிக்க, லத்தீன் அமெரிக்கக் கவிதைகள் பல மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றுட் பெரும்பாலானவை பத்திரிகைகளிலேயே பிரசுரிக்கப்பட்டன. ஆயினும் கே. கணேஷ் மொழிபெயர்த்த ஹோஷிமின் கவிதைகளும் சிவசேகரம் மொழிபெயர்த்த மாஓவின் கவிதைகளும் நூல் உருவில் வௌிவந்துள்ளன. பண்ணாமத்துக் கவிராயர் நஸ்ருல் இஸ்லாமின் கவிதைகள் சிலவற்றையும் பலஸ்தீனக்கவிதைகள் சிலவற்றையும் மொழிபெயர்த்துள்ளார். பலஸ்தீன, வியட்நாமிய, சீனக் கவிதைகள் சில எம்.ஏ.நுஃமானால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ரஷ்ஷிய, சீன, அமெரிக்கக் கவிதைகள் சிலவற்றை சண்முகம் சிவலிங்கம் மொழி பெயர்த்துள்ளார். அக்னி சஞ்சிகையின் ஒரு இதழ் முழுவதும் அமெரிக்க கறுப்புக்கவிதைகளுக்காக ஒதுக்கப்பட்டது. பாப்லோ நெருடாவின் கவிதைகள் சிலவும் சிங்கள மொழிக் கவிதைகள் பலவும் தமிழாகி உள்ளன.
3


சிறுவர்களுக்கான கவிதை முயற்சி பற்றியும் இங்கு சிறிது குறிப்பிட வேண்டும். சோமசுந்தரப் புலவரே இங்கு முதன்முதல் சிறுவர்க்கான பாடல்கள் பலவற்றை எழுதியுள்ளார். அவரது பாடல்கள் பல சிறுவர் பாட நூல்களில் இடம் பெற்றுள்ளன. இவருடன் மு. நல்லதம்பி, யாழ்ப்பாணன் ஆகியோரும் இத்துறையில் குறிப்பிடற்குரியர். ஆயினும் 60 ஆம் ஆண்டுகள் வரை சிறுவர்க்கான கவிதை முயற்சிகள் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சியடையவில்லை.

60 ஆம் ஆண்டுகளில் இத்துறையில் பலர் முயன்றார்கள். வித்துவான் வேந்தனாரின் பல பாடல்கள் சிறுவர் பாடநூல்களில் இடம் பெற்றன. மஹாகவி பிஞ்சுப்பாடல்கள் என்ற பெயரில் சில சிறுவர் பாடல்களை எழுதினார். அம்பி, அம்பிப் பாடல்கள் என்ற பெயரில் ஒரு நூலை வௌியிட்டுள்ளார். எம்.சி.எம். சுபைரின் மலரும் உள்ளம், பா.சத்தியசீலனின் பாட்டு, மழலைத் தமிழ் அமுதம், புத்தியால் வென்ற நத்தையார் ஆகிய நூல்களும் வௌிவந்துள்ளன. சாரணாகையூம், சி. மௌனகுரு ஆகியோரும் இத்துறையில் முயன்றுள்ளனர். ஆயினும் சிறுவர்களின் வயது, மனோவளர்ச்சி, மொழியாற்றல் ஆகியவற்றுக்கேற்ப படிமுறையாக சிறுவர் பாடல்கள் எழுதப்படுகின்றன என்று சொல்வதற்கில்லை. அம்பி, சத்தியசீலன் ஆகியோரிடம் இப்பிரக்ஞை இருப்பதாகத் தெரிகின்றது. எமது சிறுவர் கவிதை இன்னும் அதிக தூரம் வளர்ச்சியடைய வேண்டியுள்ளது.
4

கவிதை வளர்ச்சிப் போக்கின் ஓர் அம்சமாக கவிதைக்காக மட்டும் நடத்தப்பட்ட சிறு சஞ்சிகைகளும் இங்கு தோன்றின. அதுபற்றியும் இங்கு குறிப்பிடுவது பொருந்தும். 1955 ஆம் ஆண்டு 'தேன்மொழி' என்னும் ஈழத்தின் முதலாவது கவிதைச் சஞ்சிகையை மஹாகவியும் வரதரும் சேர்ந்து வௌியிட்டார்கள். தேன்மொழி பதினாறு பக்கங்கள் கொண்ட சிறு சஞ்சிகையாக மாதம் தோறும் வௌிவந்தது. ஆறு இதழ்களே வௌிவந்தன எனினும் இருபது வருடங்களுக்கு முந்திய இலங்கைத் தமிழ்க் கவிதைப் போக்குகளை இனம் காட்டும் ஒரு சிறந்த பிரதிநிதியாக அது அமைந்தது.

தேன்மொழியை அடுத்து எட்டு ஆண்டுகளின் பின் 1964 முதல் 'நோக்கு' என்ற சஞ்சிகையை முருகையன், இ.இரத்தினம் ஆகிய இருவரும் சேர்ந்து காலாண்டுக்கு ஒருமுறை வௌியிட்டடனர். தாய்மொழிக் கவிதை, கவிதை மொழிபெயர்ப்பு, கவிதை விமர்சனம் ஆகிய மூன்றையும் வளர்ப்பது நோக்கின் நோக்கமாக இருந்தது. மொழி பெயர்ப்புக்கு நோக்கில் அதிக இடம் கொடுக்கப்பட்டது. புதுமைக்கும் பழமைக்கும் ஒரே காலத்தில் அது தளமாக அமைந்தது. நோக்கும் மொத்தம் ஆறு இதழ்களே வௌிவந்தன.

1969 முதல் எம்.ஏ.நுஃமான், சண்முகம் சிவலிங்கம் ஆகிய இருவரும் சேர்ந்து 'கவிஞன்' காலாண்டு இதழை வௌியிட்டனர். கவிதையின் சமூகப் பெறுமானம், கலைத்தரம் ஆகிய இரண்டு அம்சங்களைக் கவிஞன் முக்கியமாக வலியுறுத்தியது. முன்னைய இரு கவிதை இதழ்களையும் போலவே கவிதை மொழிபெயர்ப்பின் அவசியத்தை கவிஞனும் உணர்ந்திருந்தது. கவிதை விமர்சனத்துக்கும் முக்கிய இடம் கொடுத்தது. கவிஞன் மொத்தம் நான்கு இதழ்களே வௌிவந்தன.

70க்குப் பின்னர் தோன்றிய புதுக் கவிதைப் போக்கின் வௌியீட்டுக் களமாக இக்காலப் பகுதியில் சில புதுக்கவிதை இதழ்களும் தோன்றின. 1973 ஆம் ஆண்டில் நீள்கரைநம்பி, அப்துல் சத்தார் ஆகிய இருவரும் க-வி-தை என்ற புதுக் கவிதை ஏடு ஒன்றை வௌியிட்டனர். அது தொடர்ந்து வௌிவரவில்லை. 1975இல் கவிஞர் ஈழவாணன் 'அக்னி' என்ற புதுக் கவிதை ஏட்டை வௌியிட்டார். ஐந்து இதழ்களுடன் அதுவும் நின்றுவிட்டது. முன்னைய கவிதை இதழ்களைப் போல் சுய ஆக்கம், மொழிபெயர்ப்பு, விமர்சனம் ஆகியன அக்னியிலும் இடம் பெற்றன. இவை தவிர புதுக் கவிதைக்கு முதன்மை கொடுத்து பொன்மடல், நவயுகம் ஆகிய இரு சஞ்சிகைகள் வௌிவந்தன. அவையும் இரண்டொரு இதழ்களுடன் நின்றுவிட்டன. அச்சகச் செலவு அதிகரிப்பும் - வாசகர் குறைவும் கவிதை இதழ்களின் அற்ப ஆயுளுக்குக் காரணமாக அமைந்தன.
5

கவிதை ஏடுகளைப் போல் கவிதையை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் சாதனமாக கவிதை அரங்குகள் அமைந்தன. 60ஆம் ஆண்டுகள் கவிதை அரங்கின் எழுச்சிக் காலம் எனலாம். எல்லாக் கூட்டங்களிலும் விழாக்களிலும் கவிதை அரங்கும் ஒரு முக்கிய அம்சமாக அமைந்தது. முக்கிய விழாக்களின் போதெல்லாம் வானொலியிலும் கவிதை அரங்குகள் இடம்பெற்றன. கவியரங்குகள் மூலம் கவிஞர்கள் மக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டார்கள். கவிதையை வாசிக்கும் பழக்கம் அற்றவர்களுக்கும் அதை அறிமுகப் படுத்துவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்தது எனலாம். மஹாகவி, முருகையன், நீலாவணன், சில்லையூர் செல்வராசன். எம்.ஏ.நுஃமான், பா. சத்தியசீலன், கந்தவனம், காரை சுந்தரம்பிள்ளை, சி. மௌனகுரு முதலியோர் 60 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் பல பகுதிகளிலும் கவிதை அரங்குகளில் அடிக்கடி பங்குபற்றினர். இவர்கள் அலாதியாகக் கவிதையைச் சொல்லும் முறை கவிதை மீது மக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடியதாக அமைந்தது. மேடையில் கவிதையைச் சொல்வதற்குப் பதிலாக பாடும் முறையையும் சிலர் கையாண்டனர். மண்டூர் சோமசுந்தரம்பிள்ளை, அரியாலையூர் ஐயாத்துரை ஆகியோர் தங்கள் குரல் வளத்தினால் சபையினரைக் கவர்ந்தனர். முருகையன், செல்வராசன், பஸீஸ் காரியப்பர் முதலியோரும் சிலவேளைகளில் இவ்வுத்தியைப் பயன்படுத்தினர். ஆயினும் கவிதையை எடுத்துரைக்கும் முறையே கவியரங்குகளில் பாதிப்பு உடையதாக அமைந்தது.

கவியரங்குகளில் கவிதை நேரடியாகக் கேட்பதற்காகவே எழுதப்படுவதால் அது கவிதையின் அமைப்பையும் பாதித்தது. இவ்வகையில் கவியரங்கக் கவிதையில் மூன்று வகையான போக்குகள் காணப்பட்டன. முதலாவது காத்திரமான எளிதில் பொருள் விளங்கக்கூடிய அதேவேளை கலையம்சம் ஊறுபடாத கவிதைகள். இரண்டாவது மேடைப் பிரசங்கம்போல் செய்யுட் சொற்பொழிவாக எழுதப்பட்ட கலையம்சம் அற்றவை. மூன்றாவது உடனடியான கைதட்டல்களையும் ஆரவாரங்களையும் பெறக்கூடிய மலிவான பகடிகள் நிறைந்தவை. இரண்டாம் மூன்றாம் போக்குடையவையே கவியரங்குகளில் அதிகம் இடம்பெற்றதால் காலப்போக்கில் கவிதையரங்கு தனது முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்கிற்று.

1 கருத்து: